சனி, 7 பிப்ரவரி, 2015

வீட்டின் பின்புறம்


இயற்கை, காடு என்பது வெறும் மரங்கள், செடி, கொடிகள் மட்டும் அல்ல. அவற்றில் வாழும் பறவைகள், பூச்சிகள், சிறு உயிரினங்கள், மண்ணில் இருக்கும் நுன்னுயிரிகளும் சேர்ந்ததுதான்.. 

எப்பொழுதும் வெறும் மரங்கள் மட்டும் அழிக்கப்படுவது இல்லை.

இன்று காலை என் வீட்டின் பின்புறம் வெகு நாட்கள் கழித்து 2 மரக்கொத்தி பறவைகளை கண்டேன். வெகு நேரம் என்னை மறந்து அவைகளை பார்த்துக்கொண்டு இருந்தேன்.சென்னைப் போன்ற பெரு நகரத்தில் வேலை செய்துக்கொண்டு இருந்ததால் எவற்றையெல்லாம் இழந்து இருக்கிறேன் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன்.

என் வீட்டின் அருகே அதிகாலையில் நிறைய அழகான பறவைகளை பார்க்கலாம். சிட்டு குருவி, தவிட்டு குருவி, மைனா, நாரை, கொக்கு, இன்னும்கூட பல அழகான, பல வண்ணங்களில் பறவைகளை காணலாம். எனக்குதான் அவைகளின் பெயர்கள் தெரியாது.

இன்னும் ஐந்து, ஆறு வருடங்களில் இவைகளைக் கூட காணமுடியாது. அவை அனைத்துமே வீட்டு மனைகள். வெகு வேகமாக வீடுகளாக மாறி வருகின்றது. என்னுடைய ஒரே கவலை, இவைகள் இடம்பெயருமா? அங்கேயே அழிக்கப்படுமா?

சில மாதங்களுக்கு முன்பு, என் வீட்டின் அருகே சிறுப் பகுதி எரித்து அழிக்கப்பட்டது. எத்தனை உயிர்கள் அழிந்தது என்று தெரியவில்லை. சில கீரிகள் வழி தவறி என் வீட்டிற்க்குள் வந்துவிட்டது. சா. கந்தசாமி எழுதிய ''சாயாவனம்'' நாவலே என் நினைவிற்கு வந்தது. ஒரு காடு அழிவதை அப்படியே நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார். எப்பொழுதெல்லாம் மரம், செடி, கொடிகள் எரிக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த நாவலே என் நினைவுக்கு வரும்.

இவைகளுக்கு தீர்வுதான் என்ன??
?