செவ்வாய், 26 செப்டம்பர், 2023

சில கிறுக்கல்கள்

எத்தனை முறை அவளை நேரில் பார்த்தாலும்,

ஒவ்வொரு முறையும் 

ஒரு டீன் - ஏஜ் பையனைப் போல மனம் படபடக்க ஆரம்பித்துவிடுகிறது.
______________________________________________


அவள் உறங்கிவிட்டாள் என்று நிச்சயமாக தெரிந்தப்பின்பும்,

ஒவ்வொரு பீப் ஒலிக்கும் என் கைப்பேசியை பார்த்துக்கொண்டிருக்கிறேன், இரவு முழுவதும்.

______________________________________________

சுய வன்முறை

முன்னாள் காதலி,
அவளின் காதலனைப் பற்றி சொல்லும் போது,

கோபப்படாமல் சிரித்து வைப்பது,
நம் மீது நாம் காட்டும் மிகப்பெரிய வன்முறை.
______________________________________________

இந்த பெண்ணும் அவளின் காதலும், இல்லாமல் இருந்திருந்தால் நான் 
மனிதனாக இருந்திருக்கமாட்டேன்.
______________________________________________

இந்த வாழ்க்கை விசித்திரமானது,

உண்மையாக காதலிக்கும் ஒரு பெண்ணையும் ,

உண்மையாக காதலிக்கும் ஒரு ஆணையும்,

வேறு வேறு நபர்களை காதலிக்க வைக்கிறது.


சனி, 26 ஆகஸ்ட், 2023

Life is beautiful

                நீண்ட இடைவெளிக்கு பின், இன்று தேவாலயத்துக்கு செல்லலாம் என்று தோன்றியது. அலுவகத்தில் கொஞ்சம் வேலைப்பளு ஞாயிற்றுகிழமை கூட அலுவலகம் செல்லவேண்டியதாகிவிட்டது. ஆலயத்திற்கு நான் சற்று காலதாமதமாக சென்றுவிட்டேன். வெளியில் படிக்கட்டுகளில் அமரவேண்டியதாகிவிட்டது.  உள்ளே புதிதாக ஒருவர் பிரசிங்கித்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் என் கவனம், வேறு ஒன்றில் சென்றுவிட்டது.

              இரண்டு நாட்களாக மழை பெய்ததால் என்னமோ, ஈசல்கள் பறக்க ஆரம்பித்தது, அந்த ஈசலை பிடித்து தின்ன, பறவைகள் அங்கு வர துவங்கின. தவிட்டு குருவி, இரட்டை வால் குருவி, இன்னும் பெயர் தெரியாத இரண்டு பறவைகள். கொஞ்ச நேரத்தில் காக்கைகளும் சேர்ந்துக்கொண்டது.

                 அந்த பறவைகள் பறந்து பறந்து ஈசல்களை பிடித்துக் கொண்டிருந்தன. அதில் இரட்டை வால் குருவிகள் ஈசலைப் பிடித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது. முதல் முறை இரட்டை வால் குருவியை இத்தனை அருகில் அதுவும் ஈசலை பிடிப்பதை பார்க்கிறேன். 

               எத்தனை வேகமாக பறந்து பிடித்தது, எந்த கோணத்தில் ஈசல் இருந்தாலும் அதற்கேற்றார் போல் வளைந்து பறந்து சென்று பிடித்தது. சற்று நேரம் கவனித்ததில் அதன் வாலின் அமைப்புதான் அதன் சிறப்பு, அவற்றின் வடிவம், அமைப்பு, குருவி வேகமாகவும், லாவகமாகவும், எந்த திசை, எந்த கோணமாக இருந்தாலும் பறந்து செல்ல உதவுகிறது. அங்கிருந்த மற்ற பறவைகளிடம் அத்துனை வேகமில்லை. தனக்கு வசதியான தூரம், கோணத்திற்கு ஈசல் வரும்வரை காத்திருந்து பிடித்தன. இந்த காட்சிகள் எனக்கு சில வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்தன.

         ஒரே ஒரு நாள் மட்டும் வாழும் ஈசல் எதோ ஒரு பறவையின் பசியாற்றிவிட்டு செல்கிறது. சில ஆண்டுகள் வாழும் நம்முடைய வாழ்க்கை எத்தனை அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. யாருக்கேனும் உபயோகமாக வாழ்ந்தோமா? ஒருவருடைய வாழ்விலாவது மாற்றத்தை ஏற்படுத்தினோமா? 

            பறந்து பறந்து ஈசலைப் பிடித்த பறவைகள் தங்கள் பசி தீர்ந்ததும், அங்கிருந்து சென்று விட்டது. அப்பொழுதும் ஈசல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் புதிய பறவைகள் வரத்தொடங்கின. தன்னுடைய தேவைத் தீர்ந்ததும் பறவைகள் சென்றுவிட்டன. அவைகளுக்கு தெரியும், அது வேறு பறவைகளின் உணவு என்று.

         மனிதன் தன் பசி தீர்ந்தப் பிறகும், மேலும் இரையை பிடித்துக் கொண்டே இருக்கிறான். அது அடுத்தவரின் உணவு என்ற எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் திருடிக்கொண்டே இருக்கிறான். இந்த உலகம் எல்லோருக்குமானது. தன் சக மனிதனிடம் மட்டுமல்ல எல்லா உயிரினத்தினிடமும் திருடிக் கொள்கிறான்.

           நம்மைச்சுற்றி எப்பொழுதும் நிறைய அழகான விடயங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காலை சூரியன், மழை, பனி, தென்றல் காற்று, குழந்தையின் சிரிப்பு, பறவைகளின் சப்தம், இன்னும் எத்தனையோ, அழகான விடயங்கள் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கிறது. நாம் தான் தேவையில்லாதவற்றில் மூழ்கி பார்க்க தவறிவிட்டோம். கொஞ்சமேனும் தலை நிமிர்ந்து பாருங்கள்.

             உங்களை சுற்றியிருக்கும் இந்த அழகான உலகை ரசிக்க ஆரம்பித்தால், உங்கள் உலகமும் அழகாக மாற ஆரம்பிக்கும்.

"Life is always beautiful"

செவ்வாய், 3 நவம்பர், 2020

தமிழ் மழை


ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!
*அடைத்த மழை
*அடைக்கின்ற மழை
*அடைக்கும் மழை
விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் 
அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!
தமிழில், 14 வகையான மழை உண்டு

1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!

மழ = தமிழில் உரிச்சொல்!
*மழ களிறு= இளமையான களிறு
*மழவர் = இளைஞர்கள்
அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..
மழை எனும் சொல்! மழ + ஐ
இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!
மழை வேறு/ மாரி வேறு! 

*மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!
*மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!
மார்+இ= மாரி!
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!
அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!
தமிழ்மொழி, 
பிறமொழி போல் அல்ல! 
வாழ்வியல் மிக்கது!
அட்டகாசம்...!
இன்னும் கொஞ்சம்...
1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது
2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..
3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...
·சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்…..
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..
அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை - துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்
6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).
7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..
8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..
மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 
(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.

-இளங்கோ ராமசாமி
Radio veritas asia tamil
Article link

Photo by Sourav Mishra from Pexels

வெள்ளி, 25 நவம்பர், 2016

பால்யக்கால நினைவுகள் 3 - ஈர்ப்புcrush என்ற ஆங்கிலச்சொல்லிற்கு, தமிழில் ஈர்ப்பு என்றுக் கூறலாம். ஏறக்குறைய எல்லோருமே தம் சிறு வயதில் இப்படியான ஒரு ஈர்ப்பை கடந்துவந்திருப்பார்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு, தன்னைவிட பெரியப் பெண் மீதுதான் ஈர்ப்பு இருக்கும். அதன் பின் உள்ள மனோதத்துவத்தை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், பிராய்டைதான் துணைக்கு அழைக்க வேண்டும். இந்த இடுக்கையில் அது வேண்டாமென்று நினைக்கிறேன்.

சிலருக்கு ஆசிரியை மீதும், சிலருக்கு தன் தெருவில் ஊரில் இருக்கும் அக்காகளின் மீதும், ஈர்ப்பு இருக்கும். இது பொதுவானது. 80 களில் சிறுவர்களுக்கு நடிகையின் மீது ஈர்ப்பு இருப்பது அரிதான விடயம். தொலைக்காட்சி இந்த அளவு வளர்ச்சியடையாத காலம். திரைப்படம் கூட எப்பொழுதாவதுதான் பார்க்கமுடியும். இந்த சூழ்நிலையில் நடிகை மீது ஈர்ப்பு எற்படுவது அரிது.

அந்த அரிய வகை விலங்கில் நானும் ஒருவன். என்னுடைய ஈர்ப்பு நடிகை காஞ்சனா. அப்பொழுது எனக்கு, 6 அல்லது 7 வயது இருக்கும். தூர்தர்ஸனில் ‘சாந்தி நிலையம்’ படம் போட்டிருந்தார்கள். (அப்பொழுதெல்லாம் ஞாயிற்றுகிழமை மட்டும்தான் சினிமா பார்க்க முடியும் அதனால் எந்த படமாக இருந்தாலும் பார்த்துவிடுவேன்) முதல் முறையாக காஞ்சனா அவர்களை பார்த்த நாள். ஆனால் அதன் பிறகு, பல வருடங்கள் கழித்துதான், காதலிக்க நேரமில்லை சினிமாவை பார்த்தேன்.(காஞ்சனாவின் முதல் படம்).

அடுத்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இப்படி நான் காஞ்சனாவின் பெரும்பான்மையான படங்களை, 25 வயதிற்கு மேல்தான் பார்த்தேன். இன்றுவரை கஞ்சனாமீதிருந்த ஈர்ப்பு சிறுதுக்கூட குறையவில்லை. இப்பொழுது தொலைகாட்சியில் காஞ்சனா நடித்த படங்களையோ, பாடல்களையோ ஒளிபரப்பினாலும் காஞ்சனாவை வைத்தக் கண் வாங்காமல், பார்த்துக்கொண்டிருப்பேன்.

திங்கள், 24 அக்டோபர், 2016

பால்யக் கால் நினைவுகள் - 2

 நன்பர்கள்

                             


என் பால்யக் காலத்தில் எனக்கு முதலில் கிடைத்தது, தோழிதான். என் சித்தியின் மகள்(அம்மாவின் தங்கை). நாங்கள் அம்மு என்று அழைப்போம். எனக்கு உடன் பிறந்த சகோதரிகள் இருவர் அவர்கள் பிறப்பதற்கு 3 வருடங்க்ளுக்கு முன்பே பிறந்துவிட்டதால், என் முதல் சகோதரியும், முதல் தோழியாகவும், அம்முவே ஆகிவிட்டார்.

                              என் அப்பாவின்  வேலை நிமித்தம் நான் என் ஆயா (அம்மாவின் அம்மா) வீட்டில் வளர்ந்தேன். என் சித்தியின் வீடும் பக்கத்துத் தெருவிலே இருந்ததால் நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒரே பள்ளி, என்னைவிட சிறியவள் என்பதால் வகுப்பு மட்டும் வேறு.

  எங்கள் வீட்டில் ஆண், பெண் பாகுபாடு காட்டாமல், வளர்த்தார்கள். பெண் குழந்தைகளுக்குதான் எங்கள் வீட்டில் எப்பொழுதும் முன்னுரிமை. அதனால் தான் நான் பெண் மீது ஆதிக்கம் செலுத்தாமல், அவர்களை சக மனிதியாக பார்க்க கற்றுக்கொண்டேன்.

                       
 இன்று நிறைய ஆண்கள் பெண்ணை அடக்கி ஆள நினைக்கும், ஆணாதிக்க மனோபாவம் அவன் குடும்பத்தில்தான் விதைக்கப்படுகிறது. அதை இந்த சமுகம், ஊடகம், சினிமா வளர்த்தெடுக்கிறது.

                           மற்றபடி, பள்ளியில் 2 தோழிகள். நான்காம் வகுப்புவரை இதுதான் என் நட்பு வட்டம். பிறகு, என் அப்பாவிற்கு என் சொந்த ஊரான ஆரணிக்கே மாற்றல் ஆனதால், நானும், ஆரணி வந்துவிட்டேன்.


                        6 வகுப்பு படிக்கும் போதுதான், என் பள்ளிக்கால நன்பர்கள் அறிமுகமானார்கள். இளையராஜா, மோகன், ராஜ ராஜன் என் நெருங்கிய நன்பர்கள். 7 ஆம் வகுப்பில் வினோத் எங்களுடன் சேர்ந்தான். 8 ல் யுவராஜ்.

                   10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். 11,12 ஆம் வகுப்புகளை நான் வேறுப் பள்ளியில் படித்தேன். அங்கு வேறு புதிய நன்பர்கள். ஆனந்த், பூபதி, செந்தில், புவனேஸ்வர், கோடீஸ்வரன், ராஜேஸ் என் பெரிய நன்பர்கள் வட்டமே இருந்தது. இன்று எவறுமே தொடர்பில் இல்லை. வினோத், யுவராஜ் மட்டும் இன்றுவரை தொடர்பில் இருக்கிறார்கள்.

பால்யக் கால நினைவுகள் - 1 நான் படிக்கும் புத்தகம், நான் பார்க்கும் திரைப்படம், நன்பர்களுடனான உரையாடல் என, என் பாலியக் காலத்தை எப்பொழுதும் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும். நினைத்து மகிழவும், பேசிக் களிக்கவும் நிறைய நினைவுகளைக் கொண்டது என் பால்யக்காலம்.

இன்றையத் தலைமுறையில் பெரும்பான்மையானவர்களுக்கு, தன் முதிர்வயதிலோ, நடுத்தர வயதிலோ, எண்ணிப் பார்க்க அப்படி ஒன்றும் சுவாரசியமான நினைவுகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அவர்கள் உலகை கைப்பேசியும், தொலைக்காட்சியும் அடைத்துக் கொண்டிருக்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன்புவரைக் கூட, என் பால்யக்கால நிகழ்வுகள் நினைவில் இருந்தன். இப்பொழுது நிறைய மறந்துவிட்டது. சில மங்களாகத்தான் நினைவிருக்கிறது. வயது ஏற, ஏற பழைய நினைவுகள் மறந்துக் கொண்டே வருகின்றன.

ஊர் காசுமுதல் முதலில் என் சொந்த செலவிற்கு பணம் தரப்பட்டது, இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பும் நிறைய முறை பணம் தரப்பட்டுள்ளது. “ஊர் காசு” என்றுக் கூறுவார்கள். விடுமுறையில் உறவினை வீடுகளுக்குச் செல்லும் போதும், அவைகள் நம் வீடுகளுக்கு வரும்பொழுதும், அந்த வீட்டு சிறார்களுக்கு பணம் தறுவார்கள், அதற்குதான் ஊர்காசு என்றுப் பெயர். அவைப் எப்பொழுதும் என் அப்பாவிடம்தான் போய் சேரும். அதனை செல்வு செய்யும் உரிமை எனக்கில்லை.

அப்பொழுது எனக்கு 7 வயது என்று நினைக்கிறேன். என் அம்மாவின் சித்தப்பா, எங்கள் ’சின்னத் தாத்தா’ 5 பைசா, 10 பைசாவாக சில சில்லரை நானயங்களை எனக்குத் தந்தார். அதுதான் எனக்காக, என் சொந்த செலவிற்காக கொடுக்கப்பட்ட முதல் பணம். அதை வைத்து என்ன வாங்கினேன் என்று நினைவில்லை. ஒரு வேளை தேன் மிட்டாய் ஆக இருக்கலாம். அப்பொழுது அதுதான் என் பிரியமான நொருவை.

என் சின்னத் தாத்தாவிடம் 1,2,3, பைசாக்களும் சில இருந்தன ஆனால் அரசாங்கம் அப்பொழுது அவைகள் செல்லாது என அறிவித்திருந்தன.

திங்கள், 13 ஜூன், 2016

39 வது புத்தகக் காட்சி 2016


வழக்கத்துக்கு மாறாக இந்தமுறை புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் நடைப்பெற்றது. சென்னையில் இருந்தவரை எங்கு நடந்தாலும், சென்று வருவது எனக்கு கடினமாக இருக்காது. சென்னை எனக்கு சொந்த ஊரைப்போன்றது, சொல்லப்போனால் சொந்த ஊரைக் காட்டிலும் சென்னையைப்பற்றி அதிகமாகவே தெரியும். சொந்த ஊருக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றது இன்றுவரை நான் ஏன் சென்னையைவிட்டு வந்தேன் என்றே தெரியவில்லை.

இந்தமுறை என் சொந்த ஊரான ஆரணியிலிருந்து (திருவண்ணாமலை மாவட்டம்) தீவுத்திடலை வந்தடைவதற்குள்ளாகவே மிகுந்த கலைப்படைந்துவிடேன். வெயில் என்னை மேலும் கலைப்படையச் செய்தது. மொத்தம் இரண்டரை மணி நேரம் அரங்குகளைப் பார்த்தேன். மேலோட்டமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. சின் புத்தகங்களை வங்கினேன். பெரிய பதிப்பகங்களை இந்த முறை தவிர்த்துவிட்டு, சிறிய பதிபகங்களில் புத்தகங்களை வாங்கினேன். பெரிய பதிப்பகங்களின் புத்தகங்களையும் சிறியப் பதிப்பகங்களிலேயே வங்கினேன்.

சென்னையில் எனக்கு எப்பொழுதுமே சவாலாக இருப்பது கழிவறையைக் கண்டுப்பிடிப்பதுதான். இந்தமுறையும் சவாலாகவே இருந்தது. ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வந்துப் போகும் சென்னையில் சரியான, சுகாதாரமான் பொதுக் கழிவறைகள் இல்லாதது மிகப்பெரியக் குறை.

கடைசி நாளுக்கு முந்தைய நாள் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருன்ந்தது. புத்தக அரங்கைவிட உணவு அரங்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீவுத்திடல் என்றதும் பொருட்காட்சி என்று நினைத்து வந்துவிடார்களோ என்று தோன்றியது. நிறைய இளைஞர்கள், குழந்தைகளை பார்த்தது சந்தோசமாக இருந்த்தது.

நான் வாங்கிய புத்தகங்களில் பட்டியல்

1. ஊரார் வரைந்த ஓவியம் - துரை. குணா

2. கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும்
     நமக்கான் மாற்று ஊடகங்களும் -   கீற்று நந்தன்

3. அருந்ததியர்களாகிய நாங்கள் - ம. மதிவண்ணன்

4. இந்து ஆன்மிகமே பாசிசம்தான் 

5. இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் - மூவலூர் ஆ. இராமாமிர்தம்

6. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் - ஓவியம் புகழேந்தி

7. தமிழினி - ஒரு கூர்வாளின் நிழல்

8. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானா புகோகா

9. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் - யமுனா ராஜேந்திரன்

10. பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகம் பிள்ளை

11. சார்லி சாப்ளின் - பி.பி கே. பொதுவால்

12. டாம் மாமாவின் குடிசை

13. அம்போத்கர் - சாதி ஒழிப்பு

14. அர்த்தமுள்ள இந்துமதம் 10 தொகுதிகளும்

பின் குறிப்பு சம்பவம் :

                                            இந்த பதிவிற்கும் இப்பொழுது நான் கூறப்போகும் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதே நாளில் நடந்ததாலும், சுவாரஸ்யம் மிகுந்தது என்பதாலும் சொல்லுகிறேன்.


கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆரணி செல்லும் பேருந்தில் அமர்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது, வேலூர் பேருந்திற்காக ஒரு இளம் பெண் நின்றுக்கொண்டிருந்தார். எப்படியும் ஒரு 20 வயது தான் இருக்கும். ஆரஞ்சு நிறச் சுடிதார் பச்சை நிற பார்டர். வெள்ளை லெக்கின்ஸ். வெள்ளை துப்பட்டா, பச்சை நிற வார் உடைய செருப்பு, ஆரஞ்சு கம்மல், கழுத்தில் மெல்லிசான சங்கிலி, எந்தவித ஒப்பனையும் இல்லாமல் மிக அழகாக இருந்தார்.

ஏதோ ஒரு ஈர்ப்பு அந்தப் பெண்ணிடத்தில் எனக்கு ஏற்பட்டது. நானும் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த்தேன். யாருக்காவோ காத்துக்கொண்டிருந்தார்.  நொடிக்கு ஒருமுறை கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு இருந்த பெஞ்சில் உட்கார்ந்துக்கொண்டு கால் இரண்டையும் ஆட்டிக்கொண்டே ஏதோ ஒரு குளிர்பானத்தை குடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது, அந்தப் பெண்ணிடம் எனக்கு பிடித்தது அந்த பெண்ணின் குழந்தைதனம். முகம் மட்டும் அல்ல, அந்த பெண்ணின் மனதும் குழந்தையுள்ளம் கொண்டதாகத்தான் இருக்கும். குழந்தைகள் மட்டும்தான் எந்த ஒப்பனையும் இல்லாமலே அழகாகத் தெரிவார்கள். என் பேருந்துக் கிளம்பும்வரை அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.