வெள்ளி, 25 நவம்பர், 2016

பால்யக்கால நினைவுகள் 3 - ஈர்ப்பு



crush என்ற ஆங்கிலச்சொல்லிற்கு, தமிழில் ஈர்ப்பு என்றுக் கூறலாம். ஏறக்குறைய எல்லோருமே தம் சிறு வயதில் இப்படியான ஒரு ஈர்ப்பை கடந்துவந்திருப்பார்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு, தன்னைவிட பெரியப் பெண் மீதுதான் ஈர்ப்பு இருக்கும். அதன் பின் உள்ள மனோதத்துவத்தை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், பிராய்டைதான் துணைக்கு அழைக்க வேண்டும். இந்த இடுக்கையில் அது வேண்டாமென்று நினைக்கிறேன்.

சிலருக்கு ஆசிரியை மீதும், சிலருக்கு தன் தெருவில் ஊரில் இருக்கும் அக்காகளின் மீதும், ஈர்ப்பு இருக்கும். இது பொதுவானது. 80 களில் சிறுவர்களுக்கு நடிகையின் மீது ஈர்ப்பு இருப்பது அரிதான விடயம். தொலைக்காட்சி இந்த அளவு வளர்ச்சியடையாத காலம். திரைப்படம் கூட எப்பொழுதாவதுதான் பார்க்கமுடியும். இந்த சூழ்நிலையில் நடிகை மீது ஈர்ப்பு எற்படுவது அரிது.

அந்த அரிய வகை விலங்கில் நானும் ஒருவன். என்னுடைய ஈர்ப்பு நடிகை காஞ்சனா. அப்பொழுது எனக்கு, 6 அல்லது 7 வயது இருக்கும். தூர்தர்ஸனில் ‘சாந்தி நிலையம்’ படம் போட்டிருந்தார்கள். (அப்பொழுதெல்லாம் ஞாயிற்றுகிழமை மட்டும்தான் சினிமா பார்க்க முடியும் அதனால் எந்த படமாக இருந்தாலும் பார்த்துவிடுவேன்) முதல் முறையாக காஞ்சனா அவர்களை பார்த்த நாள். ஆனால் அதன் பிறகு, பல வருடங்கள் கழித்துதான், காதலிக்க நேரமில்லை சினிமாவை பார்த்தேன்.(காஞ்சனாவின் முதல் படம்).

அடுத்தப் படத்தைப் பார்க்கும் பொழுது நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இப்படி நான் காஞ்சனாவின் பெரும்பான்மையான படங்களை, 25 வயதிற்கு மேல்தான் பார்த்தேன். இன்றுவரை கஞ்சனாமீதிருந்த ஈர்ப்பு சிறுதுக்கூட குறையவில்லை. இப்பொழுது தொலைகாட்சியில் காஞ்சனா நடித்த படங்களையோ, பாடல்களையோ ஒளிபரப்பினாலும் காஞ்சனாவை வைத்தக் கண் வாங்காமல், பார்த்துக்கொண்டிருப்பேன்.