ஞாயிறு, 22 மார்ச், 2015

சமோசா


 நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் பின்னால் ஆயிரம் கதைகள் ஒளிந்திருக்கும். சில சுவாரசியமாக இருக்கும், சில சோகமாக இருக்கும், சில மர்ம நாவல் போலக்கூட இருக்கும், ஏன் சில அசுவாரசியமாக கூட இருக்கும். ஆனால், நிச்சயம் கதை இருக்கும்.

என் அலுவலகம் இருக்கும் பகுதியில், மாலையில் சமோசா விற்கும் சிறுவர்களை பார்க்க முடியும்.அவர்களைப் பார்க்கும்போது, எனக்குள் சில கேள்விகள் எழுந்தன.
     
       யார் இந்த சிறுவர்கள்?
       இவர்கள் பள்ளிக்கு செல்வார்களா?
       எப்பொழுதும் சமோசாதான் விற்பார்களா?

என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே, அவர்களிடம் சமோசா வாங்க ஆரம்பித்தேன். எல்லோரும் காலையில் பள்ளிச் சென்றுவிட்டுதான் மாலையில் சமோசா விற்கிறார்கள் என்பது எனக்கு சற்று ஆறுதல் அளித்தது.
    எப்படியும் எல்லா சமோசாவையும் விற்றுவிட்டு, தன் முதலாளியிடம் கணக்கை ஒப்படைத்துவிட்டு வீடு செல்ல குறைந்தது இரவு 9 மணி ஆகிவிடும். 

ஆனால் இவர்கள் எப்பொழுது வீட்டுப்பாடங்களை செய்வார்கள்? ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை எப்பொழுது படிப்பார்கள்? எப்பொழுது விளையாடுவார்கள்?
காலை பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீதி வீதியாக அலைந்து சமோசா விற்றப் பின், களைப்பில் உறங்கத்தான் முடியும். எப்பொழுது படிப்பது? எப்பொழுது விளையடுவது?

இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசங்களைக் கூட அனுபவிக்க முடியாமல்,  இப்படி உழைக்க என்ன காரணம்? மிகச் சரியாக யூகித்தீர்கள்... வறுமை... இவர்களைப் பார்க்கும் போது, தியாகராய நகரில் ஜவுளிக்கடைகளில் வேலைச் செய்யும் பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள்.

ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தப் போது, அவர்களில் ஒரு சிறுவன் கலக்கத்துடன் நின்றுக்கொண்டு இருந்தான்.
அவனிடம் 10ரூபாய்க்கு சமோசா வங்கிக் கொண்டு விசாரித்தேன். யாரோ ஒரு சிறுவன் 2 சமோசாக்களை திருடிக்கொண்டு ஓடிவிட்டதாக கூறினான். "5 ரூபாய் போச்சுண்ணா" என்று அவன் கூறியப் போது, எனக்கு மனம் கலங்கிவிட்டது. அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
வந்தப் பிறகு, யேசித்தேன் ஆறுதல் கூறியதற்க்கு பதிலாக, ஒரு 5 ரூபாய் கொடுத்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பானே என்று தோன்றியது.

மறு நாள் அந்த சிறுவனைப் பார்த்தேன் நேற்று நடந்ததை மறந்துவிட்டு, சமோசா விற்றுக்கொண்டு இருந்தான். இன்னும் விழிப்பாக. நல்லவேளை அவனுக்கு 5 ரூபாய் கொடுக்கவில்லை. அப்படி செய்து இருந்தால், இதுப்போல் எப்பொழுது நடந்தலும், யாராவது இப்படி உதவுவார்கள் என்று எதிபார்த்து இருப்பான். ஆனால் இப்பொழுது, இனி இதுபோல் நடக்காமல் எப்படி இருப்பது என்று கற்றுக்கொண்டான்.

இவை இங்கு மட்டும் நடப்பவை அல்ல........ 

 இந்தியா முழுவதும் இவர்களைப் போல் பலர் இருக்கிறார்கள். இதற்க்கெல்லாம் தீர்வுதான் என்ன?

 அரசாங்கத்தை மட்டும் குரைச் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. நம் நாட்டின் எதிர்காலமாகிய இவர்களின் வாழ்க்கையை சீரமைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை...

ஞாயிறு, 1 மார்ச், 2015

பெண் சிங்கத்தின் இதயம்


நேற்று யூ டியுபில் "Heart of a lioness " என்ற ஆவணப்படத்தை பார்த்தேன். இயற்கை ஆர்வலரும் தொலைக்கட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான சாபா டக்ளஸ் ஆமில்ட்டன் இந்த படத்தை எடுத்துள்ளார். 42 நிமிடங்கள் ஒடும் இந்தப் படத்தை பற்றி இரவு வெகு நேரம் வரை யோசித்துகொண்டு இருந்தேன்.

கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவில் சம்புரு என்ற பகுதியில் உள்ள காட்டில் பரவி வரும் வதந்தியை பற்றி கேள்விப் பட்டு அங்கு வருகிறார் சாபா. ஒரு பெண் சிங்கம் ஆரிக்ஸ் குட்டியை தத்து எடுத்து உள்ளதாக கூறுகிறார்கள். அந்த சிங்கத்தின் பெயர் காமுன்யாக் (ஆசிர்வதிக்கப் பட்ட ஒன்று) ஆரிக்ஸ் என்பது ஒருவகையான மாண்.

வழித்தவறிப் போன குட்டியை உண்ணாமல், தத்து எடுத்து பாதுகாத்து வருகின்றது காமுன்யாக். அந்த குட்டி காமுன்யாகிடம் இருந்து விலகிச்செல்லும்போது, தன் குட்டிகளை அழைக்கும் போது ஏற்படுத்தும் ஒலிகளை எழுப்பி குட்டியை அழைத்தது.




திடீரென ஒரு ஆண் சிங்கம், குட்டியை அடித்து திண்றுவிடுகிறது. அதை தடுக்க முடியாமல் காமுன்யாக் திகைத்து நிற்கிறது. பின் அது நடந்துக் கொள்ளும் விதம், தாய் தன் குட்டியை இழந்துவிட்டு வேதனையில் துடிப்பதுப் போல் இருந்தது.

மறு நாள்,
         16 நாட்களுக்குபின், வேட்டையாடி தன் முதல் உணவை காமுன்யாக் உண்டது.

1 வருடத்திற்குப் பின்,
         5 ஆரிக்ஸ் குட்டிகளை தத்தெடுத்துக் கொண்டது. அதில் ஒன்று பசியால் இறந்துவிடுகிறது. மற்றவை தப்பி ஓடிவிட்டது. கடைசி ஒன்றை காமுன்யாக் கைவிட்டுவிட்டது. அது தன் தாயிடமே சேர்ந்துவிடும்.அதன் பின் காமுன்யாகை யாரும் பார்க்கவில்லை.

எந்த விலங்கும் தன் இனத்தை தானே அழித்ததாக எந்த வரலாறும் இல்லை. அடுத்த உயிரைக்கூட பசிக்காகதான் கொல்கிறது. "பிரிடேடர்" என்று அழைக்கப்படும் சிங்கம் ஆரிக்ஸ்  குட்டிகாக தன் இயல்பான குணம் வேட்டையாடுதலையே விட்டுவிட்டது. ஆனால் மனிதன் மட்டும் தன் சுய நலத்திற்காக, தன் இனத்தை தானே அழித்துக் கொண்டு இருக்கிறான். உலகத்தில் மிக கொடுரமான விலங்கு மனிதன்.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய "விலங்கு பண்ணை" என்ற நாவலில் ஓல்டு மேஜர் என்ற வெள்ளை நிறப் பன்றி பேசும் ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது.

            "மனிதன் தான் நமக்கெல்லாம் உண்மையான ஒரே எதிரி. இப்போதுள்ள காட்சியிலிருந்து மனிதனை மட்டும் விலக்கிவிட்டுப் பாருங்கள், நம்முடைய மிகக் கடுமையான அதீத உழைப்புக்கும் கொடிய பசிக்கும் மூலக்காரணம் முழுவதுமாக ஒழிந்துவிடும்"

எட்டு பண்பாடுகளின் நாடு - 2


முந்தையப் பதிவில் எண்டோ சல்பானைப் பற்றி எழுதினேன். இந்த இரண்டாவது பதிவில் மற்ற விடயங்களைப் பற்றி பார்ப்போம்.

உண்மை சம்பவத்தை தழுவி இருந்தாலும், பிரசார நெடி சிறுதும் இல்லை. மிக செறிவாக, மிக அழகாக எழுதியுள்ளார். 36 வது அத்தியாயத்தில் ஜெயராஜன் கூட்டத்தில் ஆற்றும் உரை கூட சுவாரசியமாகவும் உள்ளது, நிறைய தகவல்களுடனும் உள்ளது.

 நீலகண்டன் - தேவயானி இருவருக்குமான காதல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. இப்படியான ஒரு அழகான, கண்ணியமான காதலை நான் எங்கும் கண்டதும் இல்லை, படித்ததும் இல்லை.

 நிறைய கதாபத்திரங்கள் வருகிறார்கள், எல்லோரும் நம் மனதில் பதிந்துவிடுகிறார்கள். குகை, வயதான கழுதை, சுக்ரீவன், நண்டு, நிலைக்கண்ணடி என்று மனிதர்களோடு சேர்ந்து இவைகளும் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

 நாவலின் முடிவில் நீலகன்டனும் தேவயானியும் குகையினுள் அடைகலம் புகும் காட்சி, விவிலியத்தில் நோவாவின் கதையை நினைவுப்படுத்தியது. நோவா கட்டும் பேழையில் அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடி இருக்கும். பிரளயத்தால் கடவுள் உலகத்தை அழித்துப் போடும் மட்டும் உள்ளே பாதுகாப்பாக இருக்கும். இந் நாவலின் இறுதியிலும் குகையின் உள்ளே அனைத்து ஜீவராசிகளும் பிரளயம் முடியும் வரை, இவைகள் இங்கேதான் இருக்கும் என்று குகை கூறும். நீலகண்டனும் தேவயானியும் குகையினுள் காலடி எடுத்து வைக்கும் போது குகை பெரிய படகை போல் ஆடும்.

மற்றொரு இடத்தில் நீலகண்டனும், ஜெயராஜனும் ஏதோ சத்தம் கேட்டு வெளியே  வந்து பார்ப்பார்கள். ஜடாதாரி மலையில் சூறாவளி கடுமையாக வீசீக் கொண்டு இருக்கும். அது பார்ப்பதற்கு சிவனின் தாண்டவம் போல் இருக்கிறது என்பார்கள்.

இப்படி பல இடங்களில் இயற்கையை கடவுளுடன் ஒப்பிட்டு இருப்பார் அம்மிகாசுதன். எனக்கு அவர் இயற்கைதான் கடவுள் என்று கூறுகிறாரோ என்று தோன்றியது.

இயற்கைதான் உண்மையான கடவுள். இயற்கையை வணங்கி அதை பத்திரமாக பார்த்துக் கொண்டால், இயற்கை நமக்கு வேண்டிய வரத்தையும் கொடுத்து, நம்மையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.

எட்டு பண்பாடுகளின் நாடு


சில மாதங்களுக்கு முன்பு என் அலுவலக நன்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு சுழலியல் பக்கம் சென்றது.பொதுவாக எங்கள் பேச்சு உலக சினிமா, அரசியல், பொருளாதாரம், புத்தகங்கள் என்று இருக்கும். ( நிண்ட நாளைக்குப் பிறகு அறிவுப்பூர்வமாக உரையாட கிடைத்த ஒரு நன்பர்)

அன்றைய உரையாடலின் போது, "என்மகஜெ" என்ற நாவலைப் பற்றிக் கூறினார். அது ஒரு சுழலியல் குறித்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்பது மட்டுமே அவருக்கு தெரிந்திருந்தது. இனையத்தில் என்னால் அப்புத்தகம் குறித்த விவரங்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை. சென்னை புத்தக கண்காட்சியிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு நாள் எங்கள் ஊர் நூலகத்திற்கு சென்றிருந்தேன். இரவல் பெற்ற புத்தகங்களை மாற்றி வர, 6 மாதங்களாக தேடிய புத்தகம் என் முன்னால் வந்தது. நூலாகம் என்னை என்றுமே ஏமாற்றியது கிடையாது. எங்கள் ஊர் நூலகத்தில் நல்ல புத்தகங்கள் கிடையாது என்று என் நன்பர்கள் கூறுவார்கள். நூலகம் எப்பொழுதும் என்னை எமாற்றியது இல்லை.

என்மகஜெ - அம்பிகசுதன் மாங்காடு அவர்கள் எழுதிய மலையாள சுழலியல் நாவல். தமிழில் சிற்பி மொழிப்பெயர்த்துள்ளார். ஆரம்பத்தில் காடுகளை பற்றியும், பழங்குடியினரை பற்றிய கதை என்று நினைத்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாகதான் படித்தேன். 16 வது அத்தியாத்திற்குப் பிறகு, மொத்த நாவலையும் முடித்துவிட்டுதான் புத்தகத்தை கீழே வைத்தேன். இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இதுவரை எந்த புத்தகமும் என்னை இந்த அளவு பாதித்தது இல்லை. இந்த புத்தகம் மட்டும் பாதிப்பை ஏற்படுத்த காரணம் "என்டோ சல்பான்".

காலையில் முதல் வேலையாக இனையத்தில் என்டோ சல்பானை பற்றி தேடினேன். நான் படித்ததும், பார்த்த புகைப்படங்களும் என் இரத்தத்தை உறைய வைத்தது.

பூச்சிக்கொல்லி என்ற பெயரில் கொடிய நஞ்சை 25 ஆண்டுகளாக இந்த மண்ணில் டன் கணக்கில் கொட்டியிருக்கிறார்கள். இப்பொழுது நிறுத்தினாலும் இதன் வீரியம் குறைய 80 ஆண்டுகளாவது ஆகும். அதன் பிறகும் முடிந்துவிடும் விடயமல்ல இவை.

இந்த நஞ்சு தாவரம், பூச்சிகள், சிறு உயிரினங்கள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் என கொன்று குவித்துள்ளது. பல குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைவாகவும், அங்கயீனர்களாக பிறந்துள்ளனர். விசித்திர உருவங்களுடன் குழந்தைகள் பிறக்க இந்த என்டோ சல்பானே காரணம்.


புத்தகத்தில் ஒரு இடத்தில் "இவை நம்மீது போடப்பட்ட அணுகுண்டு, ஒரே நாளில் அல்ல கொஞ்சம் கொஞ்சமாக. ஜப்பானிலாவது வெளி நாட்டுக்காரன் குண்டு போட்டான். ஆனால் இங்கோ நம்மவர்களே என்டோ சல்பானை போடுகிறார்கள்."என்று வரும்.

எவ்வளவு உண்மை!

என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது, தடை செய்யப்பட்டப் பின்பும் தமிழ் நாட்டில் என்டோ சல்பான் புழகத்தில் இருப்பது. நம் விவசாயிகள் என்டோ சல்பானின் பாதிப்பு தெரியாமல் இன்னும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரை என்டோ சல்பானை மட்டும் ஒழித்தால் போதாது. எல்லா இரசாயன உரங்களையும் கைவிட வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மாறுவதுதான் ஒரே சிறந்த வழி.

சரி "என்மகஜெ" என்றால் என்ன? (தலைப்பை பார்க்கவும்)