சனி, 26 ஆகஸ்ட், 2023

Life is beautiful

                நீண்ட இடைவெளிக்கு பின், இன்று தேவாலயத்துக்கு செல்லலாம் என்று தோன்றியது. அலுவகத்தில் கொஞ்சம் வேலைப்பளு ஞாயிற்றுகிழமை கூட அலுவலகம் செல்லவேண்டியதாகிவிட்டது. ஆலயத்திற்கு நான் சற்று காலதாமதமாக சென்றுவிட்டேன். வெளியில் படிக்கட்டுகளில் அமரவேண்டியதாகிவிட்டது.  உள்ளே புதிதாக ஒருவர் பிரசிங்கித்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் என் கவனம், வேறு ஒன்றில் சென்றுவிட்டது.

              இரண்டு நாட்களாக மழை பெய்ததால் என்னமோ, ஈசல்கள் பறக்க ஆரம்பித்தது, அந்த ஈசலை பிடித்து தின்ன, பறவைகள் அங்கு வர துவங்கின. தவிட்டு குருவி, இரட்டை வால் குருவி, இன்னும் பெயர் தெரியாத இரண்டு பறவைகள். கொஞ்ச நேரத்தில் காக்கைகளும் சேர்ந்துக்கொண்டது.

                 அந்த பறவைகள் பறந்து பறந்து ஈசல்களை பிடித்துக் கொண்டிருந்தன. அதில் இரட்டை வால் குருவிகள் ஈசலைப் பிடித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது. முதல் முறை இரட்டை வால் குருவியை இத்தனை அருகில் அதுவும் ஈசலை பிடிப்பதை பார்க்கிறேன். 

               எத்தனை வேகமாக பறந்து பிடித்தது, எந்த கோணத்தில் ஈசல் இருந்தாலும் அதற்கேற்றார் போல் வளைந்து பறந்து சென்று பிடித்தது. சற்று நேரம் கவனித்ததில் அதன் வாலின் அமைப்புதான் அதன் சிறப்பு, அவற்றின் வடிவம், அமைப்பு, குருவி வேகமாகவும், லாவகமாகவும், எந்த திசை, எந்த கோணமாக இருந்தாலும் பறந்து செல்ல உதவுகிறது. அங்கிருந்த மற்ற பறவைகளிடம் அத்துனை வேகமில்லை. தனக்கு வசதியான தூரம், கோணத்திற்கு ஈசல் வரும்வரை காத்திருந்து பிடித்தன. இந்த காட்சிகள் எனக்கு சில வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்தன.

         ஒரே ஒரு நாள் மட்டும் வாழும் ஈசல் எதோ ஒரு பறவையின் பசியாற்றிவிட்டு செல்கிறது. சில ஆண்டுகள் வாழும் நம்முடைய வாழ்க்கை எத்தனை அர்த்தமுள்ளதாய் இருக்கிறது. யாருக்கேனும் உபயோகமாக வாழ்ந்தோமா? ஒருவருடைய வாழ்விலாவது மாற்றத்தை ஏற்படுத்தினோமா? 

            பறந்து பறந்து ஈசலைப் பிடித்த பறவைகள் தங்கள் பசி தீர்ந்ததும், அங்கிருந்து சென்று விட்டது. அப்பொழுதும் ஈசல்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் புதிய பறவைகள் வரத்தொடங்கின. தன்னுடைய தேவைத் தீர்ந்ததும் பறவைகள் சென்றுவிட்டன. அவைகளுக்கு தெரியும், அது வேறு பறவைகளின் உணவு என்று.

         மனிதன் தன் பசி தீர்ந்தப் பிறகும், மேலும் இரையை பிடித்துக் கொண்டே இருக்கிறான். அது அடுத்தவரின் உணவு என்ற எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் திருடிக்கொண்டே இருக்கிறான். இந்த உலகம் எல்லோருக்குமானது. தன் சக மனிதனிடம் மட்டுமல்ல எல்லா உயிரினத்தினிடமும் திருடிக் கொள்கிறான்.

           நம்மைச்சுற்றி எப்பொழுதும் நிறைய அழகான விடயங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. காலை சூரியன், மழை, பனி, தென்றல் காற்று, குழந்தையின் சிரிப்பு, பறவைகளின் சப்தம், இன்னும் எத்தனையோ, அழகான விடயங்கள் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கிறது. நாம் தான் தேவையில்லாதவற்றில் மூழ்கி பார்க்க தவறிவிட்டோம். கொஞ்சமேனும் தலை நிமிர்ந்து பாருங்கள்.

             உங்களை சுற்றியிருக்கும் இந்த அழகான உலகை ரசிக்க ஆரம்பித்தால், உங்கள் உலகமும் அழகாக மாற ஆரம்பிக்கும்.

"Life is always beautiful"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக