வெள்ளி, 18 செப்டம்பர், 2026

கன்னிமார் சாமி - சுஜாதா செல்வராஜ்

 


எழுத்தாளர் அனுராதா ஆனந்த் அவர்களின் நேர்காணல் ஒன்றில், பெண்களை பற்றி பெண் பார்வையில் அதிகம் எழுதப்படுவது இல்லை என்றார். ஏனெனில் பெண் எழுத்து, எப்போதும் தணிக்கை செய்யப்பட்டே வருகிறது. சில சமயங்களில், பெண்களே சுய தணிக்கை செய்துகொள்கிறார்கள். அவர்கள் நினைத்ததை அப்படியே எழுத முடிவது இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் சுஜாதா செல்வராஜ் அவைகளின் எழுத்து, அதிகம் சுயதணிக்கை செய்யப்படாத எழுத்து என்றே எனக்கு தோன்றியது.

சுஜாதாவின் மொழி மிக எளிய, மனதுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி. குறைவான சொற்களில் நீண்ட காலங்களை சுருக்கிவிடுகிறார். சங்கு சிறுகதையில், கதாநாயகிக்கும் (அவளுக்கு கதையில் பெயர் இல்லை) சத்ருவுக்கும் இடையேயான உறவு எப்படி ஆரம்பித்து , வளர்ந்து கூடல் நிகழும் நிலைக்கு வந்தது என்பதை வெறும் 2 பத்திகளில் எழுதி சென்றுவிடுவார். இதுபோல நிறைய இடங்களை சொல்லலாம். ஒரே வரிகளில் பெரிய உணர்வை கடத்தி விடுகிறார். சலனம் கதையின் முடிவில், 

“மீண்டும் லதா தன் மனக்கதவுகளை இறுக மூடிக்கொண்டு விட்டாள். மூடிய கதவுகளுக்கு முன் நான் நின்றிருக்கிறேன். ஏன் இப்படி நடந்தது? இது நடந்திருக்கக் கூடாது. ஒரு பெரும் நம்பிக்கையைத் தற்செயல்போல் நான் உடைத்திருக்கிறேன். கடைசியாக அவள் எனக்கொரு வாய்ப்பு கொடுத்தாள். நேருக்கு நேர் கண் பார்த்துச் சொல்ல ஒரு உண்மை. ஒரு ஒப்புதல். அங்கும் நான் என்னை ஒளித்துக்கொண்டேன். கடைசி வாய்ப்பையும் தவற விட்டேன். தாங்க முடியாத வலி ஒன்று நெஞ்சை அழுத்திப் பிடித்தது.”

இந்த வரிகளில் கதையின் மொத்த உணர்வையும் சொல்லிவிடுகிறார். அதேபோல அவரின் வட்டார மொழி பயன்பாடு சிறப்பாக உள்ளது. 

கதை நிகழும் காலம் எங்கும் நேரடியாக சொல்லாவிட்டாலும். நாம் படிக்கும்போதே அது எந்த காலம் என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். கன்னிமார் சாமி கதையில், ராசு ராணுவத்தில் இருந்து ஓடி வந்ததால், அவனை தேடி இரண்டு வெள்ளையர்கள் வந்தார்கள் என்னும் போதே, அது பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என்பது நமக்கு தெரிகிறது. வாட்ஸ்அப் , ஆண்ட்ராய்டு போன் கதையில் வந்தால் அவை நவீனக் காலம். 

பெரும்பாலான கதைகள் கிராமத்தில் நடப்பவையாக உள்ளது. நகரத்தில் நடக்கும் கதைகளைக்கூட நாம் படிக்கும்போது, கிராம பின்னணிதான் மனதில் ஓடுகிறது. கதை முடித்த பிறகுதான், நமக்கு இது நகரத்தில் நடக்கும் கதை என்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு கிராமம் குறித்த அவரின் விவரிப்புகள் இருந்தது.

வசந்தி கதை குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்த கதை. எப்போதும் போல இந்த கதையிலும், நன்கு தெரிந்த ராசு அண்ணன்தான் அந்த கொடூரத்தை நிகழ்துகிறான். ஒரு வேளை அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்ததை வெளியே சொன்னாலும்.. அவளைத்தான் குற்றம் சொல்லும். குட்டை பாவாடை அணிந்தால் என்று. கடைசியாக வரும் வண்டிக்காரன் கூட கண்டும் காணாமல் இருந்து விடுகிறான். அவன் இந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பு.

நந்தினியின் அப்பா கதை குடிகார அப்பாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஒரு சிறுமி பற்றியது. அப்பா குடித்துவிட்டு இவள் படிக்கும் பள்ளிக்கு வரும் போது, அவமானத்தால் கூனி குறுக்கி போகிறாள். அந்த அவமானங்கள் தான் அவள் அப்பாவை கன்னத்தில் அறையும் அளவுக்கு அவளுக்கு கோவத்தை கொடுத்தது. 

பெரும்பான்மையான கதைகளில் குடிகாரர்கள் வருகிறார்கள். வார கணக்கில், தொடர்த்து குடிக்கிறார்கள். மனைவியை அடிக்கிறார்கள், அசிங்கமான வார்த்தைகளால் திட்டுக்கிறார்கள். குடி எப்போதும் குடியை கெடுக்கும்.

சிறு அனைப்புக்காக ஏங்கும் ஒரு மனைவி. தனக்கு Pedicure செய்த பெண்ணை அனைத்து ஆறுதல் அடைகிறாள். படுத்த படுக்கையாய் கிடக்கும் தன் அப்பாவின் அடிவயிற்றுக்கு கீழேயுள்ள முடியை அனே ஃப்ரெஷ் கிரீம் போட்டு எடுக்கும் ஒரு மகள். 

நடக்க முடியாமல் இருக்கும் தன் கணவனுக்கும் சேர்த்து, சந்தன கட்டைகளை விறகுகளுக்குள் வைத்து மலை வழியாக கடத்தி வந்து அந்த காசில் குடும்பத்தை தங்கும் வடிவு. அவன் அவளின் நடத்தையை சந்தேகப்பட்டு திட்டியபோதுக்கூட கோவப்படாதவள், மனங்கெட்ட சோறு என்று குப்பையில் வீசியதும் காளி ஆக மறைவிடுகிறாள். 

தோழியின் கணவன் மீது crush கொள்ளும் ரம்யா, ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்ணை ரசிக்கலாம், அதையே ஒரு பெண் செய்யும்போது, அவளை இந்த சமுதாயம் பார்க்கும் பார்வை வேறு. சலனம் கதையில் லதாவின் கணவனுக்கும் ரம்யாவிற்கும், நட்பிற்கும் காதலுக்கும் இடையே ஒரு உணர்வு. அதை ரொம்பவும் அழகாக சொல்லி இருந்தார் சுஜாதா.

இப்படி பேதை முதல் பேரிளம் பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பேசுகின்றது இந்த தொகுப்பு.

இதில் எனக்கு குறையாக இரண்டு விசயங்கள் தெரிந்தன.

விக்ரமன் படம் போல, எல்லா கதைகளும் ஒரே மாதிரி இருக்கிறது. அவருக்கு நன்கு தெரிந்த தளத்தில் எழுதியிருக்கிறார். தன்னுடைய comfort zone குல் எழுதி இருக்கிறார். அதை விட்டு வெளியே வந்து எழுதினால் இன்னும் சிறப்பான கதைகளை எழுதலாம்.

இன்னும் கூட கொஞ்சம் காத்திரமாக எழுதி இருக்கலாம். நேரடியாக பாதிக்கப்பட்டவரை அழவைக்கும். ஆனால், நேரடியாக பாதிக்கப்படாதவர், ஆண்கள் என்று யாரையும் இது சஞ்சல படுத்தாது . அவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காது.

மிக சிறப்பான மொழியை தன் வசம் ஆக்கியிருக்கிறார் சுஜாதா, அதை கொண்டு இன்னும் காத்திரமான படைப்புகளை குடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக