திங்கள், 24 அக்டோபர், 2016

பால்யக் கால நினைவுகள் - 1



 நான் படிக்கும் புத்தகம், நான் பார்க்கும் திரைப்படம், நன்பர்களுடனான உரையாடல் என, என் பாலியக் காலத்தை எப்பொழுதும் நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கும். நினைத்து மகிழவும், பேசிக் களிக்கவும் நிறைய நினைவுகளைக் கொண்டது என் பால்யக்காலம்.

இன்றையத் தலைமுறையில் பெரும்பான்மையானவர்களுக்கு, தன் முதிர்வயதிலோ, நடுத்தர வயதிலோ, எண்ணிப் பார்க்க அப்படி ஒன்றும் சுவாரசியமான நினைவுகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அவர்கள் உலகை கைப்பேசியும், தொலைக்காட்சியும் அடைத்துக் கொண்டிருக்கின்றது.

பத்து வருடங்களுக்கு முன்புவரைக் கூட, என் பால்யக்கால நிகழ்வுகள் நினைவில் இருந்தன். இப்பொழுது நிறைய மறந்துவிட்டது. சில மங்களாகத்தான் நினைவிருக்கிறது. வயது ஏற, ஏற பழைய நினைவுகள் மறந்துக் கொண்டே வருகின்றன.

ஊர் காசு



முதல் முதலில் என் சொந்த செலவிற்கு பணம் தரப்பட்டது, இன்றும் என் நினைவில் இருக்கின்றன. அதற்கு முன்பும் நிறைய முறை பணம் தரப்பட்டுள்ளது. “ஊர் காசு” என்றுக் கூறுவார்கள். விடுமுறையில் உறவினை வீடுகளுக்குச் செல்லும் போதும், அவைகள் நம் வீடுகளுக்கு வரும்பொழுதும், அந்த வீட்டு சிறார்களுக்கு பணம் தறுவார்கள், அதற்குதான் ஊர்காசு என்றுப் பெயர். அவைப் எப்பொழுதும் என் அப்பாவிடம்தான் போய் சேரும். அதனை செல்வு செய்யும் உரிமை எனக்கில்லை.

அப்பொழுது எனக்கு 7 வயது என்று நினைக்கிறேன். என் அம்மாவின் சித்தப்பா, எங்கள் ’சின்னத் தாத்தா’ 5 பைசா, 10 பைசாவாக சில சில்லரை நானயங்களை எனக்குத் தந்தார். அதுதான் எனக்காக, என் சொந்த செலவிற்காக கொடுக்கப்பட்ட முதல் பணம். அதை வைத்து என்ன வாங்கினேன் என்று நினைவில்லை. ஒரு வேளை தேன் மிட்டாய் ஆக இருக்கலாம். அப்பொழுது அதுதான் என் பிரியமான நொருவை.

என் சின்னத் தாத்தாவிடம் 1,2,3, பைசாக்களும் சில இருந்தன ஆனால் அரசாங்கம் அப்பொழுது அவைகள் செல்லாது என அறிவித்திருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக