சனி, 6 பிப்ரவரி, 2016

தலீத் இலக்கியமும் - அழகிய பெரியவனும்



தலீத் இலக்கியம் என்றால் என்ன?

            தலீத் இலக்கியம் என்றால், ஒரு குறிப்பிட்ட ஜாதி, இனத்தைப் பற்றி அந்த இனத்தாரால் எழுதப்படுவது கிடையாது.  விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பற்றி பேசுவதுதான், தலீத் இலக்கியம். அது எந்த இன, மொழி, ஜாதி மக்களாய் இருந்தலும்.

                 தலீத் இலக்கியம் என்றாலே, ஒவ்வாமையுடன் பார்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். தலீத் இலக்கியம் என்று கூறிக்கொண்டு, உங்களை நீங்களே, ஏன் பிரித்துக்கொள்கிறீர்கள். என்று விதாண்டாவாதம் பேசுகிறவர்களும் உண்டு. தலீத் இலக்கியம் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்களே, அது வேறு ஏதோ என்று ஒதுக்கிவிடுகின்றார்கள்.

               தலீத் இலக்கியம் என்றாலே, ஆதிக்க ஜாதியினரையும், பார்ப்பனர்களையும் சாடுவது. என்று என்னிக்கொண்டு, தவிர்ப்பவர்களும் உண்டு. ஆனால் உண்மையில், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், வழிபாட்டு முறை, குடும்ப அமைப்புகள், துக்கம், சந்தோசம், காதல், காமம், திருமனம் என்று அவர்களைப் பற்றிய புரிதலை பெறவும் தலீத் இலக்கியத்தின் தேவை இருக்கிறது.

             ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட இனத்தில் பிறந்துவிட்ட, ஒரே காரணத்திற்காக ஒருவரை ஒதுக்குவதும், இழிவுபடுத்துவதும், புறக்கணிப்பதும், எப்படி சரியாக இருக்க முடியும். தான் எதற்காக புறக்கணிக்கப்படுகிறோம் என்று கூட தெரியாத அவல நிலை, தலீத் குழந்தைகள் மட்டும் சந்திக்க கூடிய மிக நுட்பமான பிரச்சனை. சமுகத்தில் அவர்கள் சந்திக்கும், பல சிக்கல்கலுக்குள் இருக்கும் உளவியல். இந்தியாவில் இன்னும் 80 சதவீதத்திற்கும் அதிகமான தலீத்கள், வறுமைகோட்டிற்கு கீழே, இருப்பதற்கு பின்னால் உள்ள அரசியல் இவற்றைப் பற்றி புரிதல் எற்பட தலீத் இலக்கியத்தின் அவசியம் உள்ளது.

அழகிய பெரியவன்
             தலீத் இலக்கியப் படைப்பாளிகளில், அழகிய பெரியவன் ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. இவர் வேலூர் மாவட்டம், மேற்கு தொடர், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன். சுமார் 8 ஆண்டுகள் தொண்டு நிறுவனத்தில் பனிபுரிந்துவிட்டு. தற்போது பள்ளி ஆசிரியராக பனிப்புரிந்து வருகிறார்.

         1989 முதல் எழுதி வருகிறார்.  நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். ‘தகப்பன் கொடி’  நாவலுக்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர்.

             தலித்துகளின் சமூகப் பிரச்சினை, வலிகள், போராட்டங்கள், உட்சாதி முரண்கள், தலித்பெண்களின் நிலை, மனித அக உணர்வுகள் முதலானவை அழகிய பெரியவனின் கதைக் களங்கள். வேலூர் மாவட்ட நிலபரப்பு, சேரிகள், மனிதர்கள், அங்கு அதிகமாக இருக்கும் விவசாயம், பீடி சுற்றுதல், தோல் பதனிடும் தொழில் என அழகிய பெரியவன் தன் சிறுகதைகளில் கையாண்டு இருக்கிறார். சேரிகளில் புழங்கும் இயல்பான பேச்சு மொழி, இவரின் கதைகள் முழுவதும் விரவிக்கிட்க்கின்றன.

      ”தீட்டு” என்ற அவரது சிறுகதை தொகுப்பை, கடந்த வாரம் படிந்தேன். தீட்டு, குறி என்ற இரண்டு குறு நாவலும், 14 சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. அதில் தீட்டு, குறி இரண்டும் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவை.

அழகிய பெரியவன் சிறுகதைத் தொகுப்புகள்
  
தீட்டு, நெரிக்கட்டு, கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை, அழகிய பெரியவன் கதைகள்

புதன், 13 ஜனவரி, 2016

தேனீகள் - வாழ்வும் அழிவும்



தேனை நம் உள்ளங்கைகளில் ஊற்றி, அவற்றை நக்கி சுவைத்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். அந்த தேனுக்குப் பின்னால் நிறைய விடயங்கள் உள்ளன. விவசாயத்திற்கும், விவசாயிக்கும் மண்புழு மட்டுமே நன்பனில்லை தேனீயின் பங்கும் நிறைய உள்ளது.

                                    உலகத்தில் உள்ள அனைத்து தேனீக்களும் மிச்சமில்லாமல் அழிந்துவிட்டால், தேன் கிடைகாமல் போய்விடும் அவ்வளவுதானே என்று நினைந்துவிடாதீர்கள். தேனீக்கள் இல்லையென்றால் வெறும் 4 ஆண்டுகளில் இந்த உலகம் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும். உலகில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் 80% தேனீக்களால்தான் நடைப்பெறுகிறது.

                                  இத்தகைய தேனீக்களை கொன்று அழிக்கும் நோய் ‘காலனி கொலாப்ஸ் குறைபாடு’ (colony collapse disorder ). இந்த குறைபாட்டிற்கு முக்கிய காரணம் ’நியோனிகோடினாய்ட்ஸ்’ (neonicotinoid) என்ற பூச்சிக்கொல்லி. இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தை தாக்கி, செயலிழக்க செய்துவிடும்.


                    பெதுவாக தேன் கூட்டில், ஒரு ராணித் தேனீ இருக்கும். 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கம் செய்வற்கென்றே இருக்கும். 50,00,000 முதல் 60,00,000 வரை வேலைக்காரத் தேனீ எனப்படும் பெண் தேனீக்கள் இருக்கும். 25 முதல் 35 நாட்கள் வரை உயிர்வாழும். இவைகள்தான் தன் உடலில் இருந்து வரும், மெழுகுப் பேன்றப் பொருளால், அறுகோண வடிவத்தில் அறைகளைக் கொண்ட கூடுகளை கட்டுகின்றன. அறுகோண வடிவத்தில் கட்டுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கணித சூத்திரப்படி, இந்த வடிவம் அதிக எடையை தாங்கும். மேலும் இந்த வடிவத்தில் உள்ள அறையை முழுவதுமாக பயன்படுத்தலாம்.


                   எல்லாத் தேனீக்களும் ஒரே சமயம் தேன் எடுக்க சென்றுவிடாது. சிறு குழு முதலில் சென்று தேன் இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டு வந்து, மற்ற தேனீக்களுக்கு நடனம் மூலம், இடத்தைப் பற்றிய குறிப்புகளை தரும். புதிய இடத்திற்கு புலம்பெயரும் பேதும், இதே வழிமுறையைதான் பின்பற்றும். இப்படி செல்லும் தேனீக்கள்  நியோனிகோடினாய்ட்ஸ் தெளிக்கப்பட்ட பூக்களில் தேன் எடுக்கும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, தன் கூட்டிற்கு திரும்பிசெல்ல வழி மறந்து வழி தவறிவிடுகின்றன. பட்டினியால் அவைகள் இறந்துவிடும்.


                         நியோனிகோடினாய்ட்ஸ் மட்டும் அல்ல, கிளைஃபோசேட், எண்டோசல்பான் என்று, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயன உரங்கள் இன்னும் நம் வயல்களிலும், நம் உணவுத்தட்டிலும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 250 ரசாயன உரங்களில் 109 அபாயகரமானவை. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட 66 உரங்கள் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளது.

                      என்ன சாபம் வாங்கி வந்தோம் என்று தெரியவில்லை, உலகில் மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட அனைத்தும் இங்கு தாராளமாக, புழக்கத்தில் உள்ளது. இன்னும் கூட நாம் எதிர்வினையாற்றவில்லை என்றால், நம் எதிர்கால சந்ததினர் வாழ தகுதியில்லாத இடமாக நம் பூமி ஆகிவிடும்.

                       இதை மாற்ற ஒரே வழி மீண்டும் இயற்கைக்கு திரும்புவதுதான். அது சற்று கடினமான விடயம்தான் ஆனால் முடியாதது கிடையாது. 1960 ல் பசுமை புரட்சி வருவதற்கு முன்புவரை இயற்கை விவசாயத்தைதான் (ஆயிரம் ஆயிரம் வருடங்களாக) செய்துக்கொண்டு இருக்கிறோம். மீண்டும் இயற்கைக்கு மாறுவது என்பது முடியாத விடயம் அல்ல...

புதன், 2 டிசம்பர், 2015

வறுமையின் மூண்று நிறங்கள்


 இன்று கானொளியில் 3Shades என்ற குறும்படத்தை பார்த்தேன். அந்த படம் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது.   

நம் உள்ளங்கைகளுக்குள் உலகம் வந்துவிட்டதாக  நாம்  நம்பிக்கொண்டிருக்கிறோம். அது ஒரளவு உண்மையும் கூட. அதனாலேயே நாம் முன்னேறிவிட்டதாக அர்த்தம் கிடையாது.

                                இன்னும் நம் நாட்டில் அடுத்த வேளை உணவு, நிச்சயம் இல்லாத நிலையில்தான் கோடிக் கணக்கான மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறிக் கொண்டிருப்பது, சந்தேகத்திற்கிடமில்லாமல் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். இன்னும் கூட நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

                               அடிப்படை தேவைகள் கூட கிடைகாத மக்களின், உயர்வுதான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம். நாம் தினமும் பயனிக்கும் சாலையில், எத்தனையோ சிறுவர்களை நாம் காண்கிறோம். பிச்சை எடுப்பவர்களாக, சின்ன சின்ன பொருட்களை விற்பவர்களாக நாம் பார்க்கிறோம். எப்பொழுதாவது இவர்கள் யார்? எங்கே வசிக்கிறார்கள்? ஏன் இவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை? இவர்களுக்கு பொற்றோர்கள் இருக்கிறார்களா? என்று நாம் சிந்தித்து இருக்கிறோமா?


                                  இந்த குறும்படத்தை பார்த்தப் பிறகு, சாலையோர சிறுவர்களை பார்க்கும் போது நிச்சயமாக இந்த கேள்விகள் உங்கள் மனதில் எழும்.

                               
 படத்தின் துவக்கத்தில் ஒரு சிறுவன் சிக்னலுக்கு அருகே, சுவரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். ஜனவரி 26 என்று திரையில் வருகிறது. அதே சிக்னலில் ஒரு பிச்சைகாரன், சிக்னலில் நிற்கும் வாகனங்களில் பிச்சை கேட்கிறான். யாரும் பிச்சையிடவில்லை. பிறகு இந்த சிறுவன் தேசியக் கொடியை விற்கிறான். குடியரசு தினம் என்பதால் எல்லோரும் வாங்கிக் கொள்கிறார்கள்.

                                 இதை கவனிக்கும் பிச்சைகாரன், இரவு தனியாக செல்லும் சிறுவனை தாக்கி, பணத்தை பரித்துக் கொண்டுவிடுகிறான். இதை பார்க்கும் ஒரு இரவு காவளாளியும் தடுக்காமல் இருந்துவிடுகிறான். வீட்டில் பணம் திருடுப்போனதாக கூறும் மகனை நம்பாமல், அவனை அடித்து விரட்டிகிறார்.

                             பசியோடு வெளியே வரும் சிறுவன், சாலையோரக் கடையை சற்று நேரம் பார்த்துவிட்டு, குப்பைகளில் கிடந்த, காலை இவன் விற்ற கொடிகள் நிறைய கிடைக்கின்றன.
     
                           27 ஜனவரி,
                                     
அதே சிக்னல், தூக்கத்திலிருந்து எழுந்த சிறுவன். வாகனங்கள் நிற்பதைப் பார்த்து, கொடிகளை விற்க முயல்கிறான். ஒருவரும் வாங்கவில்லை. சிறுவன் பசியால் நடு சாலையில் அழுவதுடன் படம் நிறைவுப் பெறுகிறது.

                               5.46 நிமிடங்கள் ஓடும் இந்த படம், சிறுவனின் வறுமையை மட்டும் கூறவில்லை. எழைகள் என்றாலே குற்றச் செயலில், இடுப்படுவார்கள் என்ற ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. அதை இப்படம் உடைக்கிறது. அந்த வறுமையிலும் சிறுவன் திருடவும் இல்லை, பிச்சை எடுக்கவும் இல்லை.

                           இதில் வரும் இரவு காவலாளி, இந்த சமூகத்தை பிரதிபலிக்கிறான். நம் கண் முன்னே எந்த தவறு நடந்தாலும், இந்த காவலாளியைப் போல நாம் கண்டும் காணாமலும்தான் இருக்கிறோம்.

                          சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று மட்டும் நாம் அதிக நாட்டுப்பற்றுடன் இருக்கிறோம். ஆனால் அவை அன்றைய இரவுவரைக் கூட இருப்பது இல்லை. கொடிகள் அனைத்தும் குப்பைக்கு போய்விடுகிறது.

                        நாளைய இந்தியாவின் நம்பிக்கைகளான சிறுவர்களை காக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

படத்தைக் கான   https://www.youtube.com/watch?v=TIFiVknKdPc



                     













                                  

திங்கள், 30 நவம்பர், 2015

என் காதலி - கவிதை



அடிக்கடி கவிதை எழுதுகிறேன் என்று, எதையாவது கிறுக்குவது உண்டு. அப்படி  நான் எழுதியதில் ஒன்றை, இங்கே பதிவிடுகிறேன். இதைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். அதை வைத்துதான் நான் தொடர்ந்து கவிதை எழுதலாமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க வேண்டும்..



என் காதலி,
இந்த பிரபஞ்சத்திலேயே
மிகவும்
அழகானவள்

அவளைப் பிடிக்காதவர்களே
இல்லை
என்று
நிச்சயமாக கூறலாம்

என்னுடைய காதல்
தெரிந்தப்
பின்பும்
யாரும் எதிர்க்கவில்லை

எப்பொழுது என்னை
பார்க்க வந்தாலும்
முத்தமிட
மறக்கமாட்டாள்

என் முன்னால்
காதலிக்கு
அவளைக்
ரொம்பவே பிடிக்கும்

என் மனைவிகூட
பொறாமைக் கொள்வதில்லை
அவளுடன் நான்
கொஞ்சி விளையாடும் போது

என் நினைவு தெரிந்த
நாளிலிருந்தே
அவளை
எனக்கு தெரியும்

இந்த உலகத்தில்
நான்
உள்ளவரை
அவளைக் காதலிப்பேன்

நான் பிறக்கும்
முன்பிருந்தே
அவள்
இருக்கிறாள்

நான் இறந்த
பின்பும்
அவள்
இருப்பாள்

இன்னுமா தெரியவில்லை
அவளின்
பெயர்
“மழை”

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

கண்ணீரை விதைக்கிறவன்

"கண்ணீரை விதைக்கிறவன், கெம்பீரமாய் அறுக்கிறான்"

இந்த வாரம் நூலகத்திலிருந்து நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" என்ற சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். முதல் கதையே என் மனதையும், கண்களையும் கலங்க வைத்துவிட்டது. மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கும் முன் எத்தனை முறை அழுதேன் என்றே தெரியவில்லை. சில இரவுகள் தூக்கத்தில் கூட பாரதிகுமாரின் கதாபாத்திரங்களே வந்துபோயின.

தினமும் நம்மைச் சுற்றி எத்தனையோ விடயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனப்படுங்கொலை, உடல் மற்றும் மனரீதியாக மனிதர்கள் சித்ரவதை செய்யப்படுவது என்று நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாமக்கு நடக்காதவரை அவை வெறும் செய்திகள். சிறிய எதிர்வினை கூட ஆற்றுவதுயில்லை.

பிறர் துன்பங்களை தன்னுடையதுப் போல் பாவிக்கும் ஒரு மனிதனால்தான், காலவெளியை கடந்தும் நிலைத்து நிற்கும் படைப்புகளை படைக்க முடியும். அப்படியான ஒரு ஆக சிறந்த படைப்புதான் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்".

அனைத்து கதைகளுமே அருமையாக உள்ளது. ஒரு கதைக்கூட புனைவு என்று எண்ணத் தோன்றவில்லை. எல்லாமே நிஜ சம்பவங்களை அப்படியே எழுதியது போன்றே இருந்தது. மிக எதார்தமான சிறுகதைகள்.  முன்னுரையில் எழுதி இருப்பதைப் போன்றே, எனக்கும் "பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள்" படிக்கும் போது பாரதி ஒரு கிருத்துவராக இருப்பாரோ என்று தோன்றியது. "பிராது" படித்த போது இந்து மடங்களில் அதிகம்  இருந்தாரோ என்று தோன்றியது. " பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்" படித்த பிறகு அவர் ஒரு இஸ்லாமியர் என்றே நினைத்துக் கொண்டேன்.

 நான் அதிகம் ரசித்த சிறுகதைகள்  பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள், பிராது, அய்யனார் உறக்கப் பாட்டு, ஆடிஸம், பிடிபட்டவன், இந்திய சோறு, உள் மன ஓசைகள், பாத்திமாவும் ஃபவுண்டன் பேனாவும்.

 நான் மிகவும் ரசித்த வரிகள்

"பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் " சிறுகதையில், கர்பாலாவில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 10 வயது சிறுமியின் தாய் சபித்தப்படி கூறுவாள், "எந்த பேரழிவைத் தந்துவிடும் அந்தக் கைகள் இருந்திருந்தால் என்று அவற்றைக் குண்டுகளுக்கு இரையாக்கினார்கள்." 

"அய்யனார் உறக்கப் பாட்டு" சிறுகதையில் அழகம்மையும், வேலாயிக் கிழவியும் பேசுகையில், அழகம்மை,"கல்யாணம் ஆகலைனா அய்யனாருதான் தொன, அவரையே கட்டிகிட்டதா நெனச்சி அப்படியே கெடக்கேன்"

கிழவி, " அடி செருப்பால, நீ கெட்ட கேட்டுகு அய்யனாரு கேக்குதா? ஆக்கங்கெட்ட மூத்... நீ பேசலடி நீ தின்ற பன்னிக் கொளுப்பு பேசுது... போ... போ...  தண்ணி மொண்டுகிட்டு பன்னி மேய்க்கப் போ... அதா ஒனக்கு கெதி"

அழகம்மை, "ஆண்டாலு ஆசபட்டா நியாயம், இந்த அழகம்ம ஆசபட்டா குத்தமா?

சுவரில் எழுதாதீர்கள் கதையில்,

குருடர்கள் பார்கிறார்கள்... செவிடர்கள் கேட்கிறார்கள்...

"என்னோடு சிறு பிராயத்தில் இருந்த ஊனமுற்ற சகோதரர்கள் இருக்கும் இல்லத்திலோ, மருத்துவமனைகளிலோ அற்புதங்கள் நிகழ்த்தாமல், அரசியல் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தும் திடல்களில் ஏன் நிகழ்த்துகிறார்கள் என்ற கேள்வி உங்களைப் போல் எனக்கும் உண்டு".

பாரதிக் குமார் கெம்பீரமாகவே அறுவடை செய்திருக்கிறார்...


செவ்வாய், 15 செப்டம்பர், 2015

இயற்கை ஆர்வலன்

நீங்கள் இயற்கையை நேசிப்பவரா? நிச்சயமாக, நீங்கள் வேலை இல்லாதவர், உபயோகமான விடயங்கள் எதுவும் செய்யாதவர், பேசியே கழுத்தை அறுப்பவர் என்று இந்த சமுகத்தால் எண்ணப்ப்டுவீர்.



உலகம் முழுவதுமே இயற்கை ஆர்வலர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகிறர்கள்.
நம் நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது. இன்று ஆர்வலர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லை.10 வருடங்களுக்கு முன்பு இன்னும் மோசமாக இருந்தது.

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்களுக்கு தாவரவியல் பாடத்தை மேக நாதன் என்ற ஆசிரியர் எடுத்தார். அவர் இயாற்கை ஆர்வலரும் கூட. பாடத்தை வகுப்பில் மட்டும் நடத்தாமல், வெளியே அழைத்துச் சென்று பல புதிய தாவரங்களை அறிமுகம் செய்துவைத்தார்.

எங்கள் பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில், தினம் ஒரு ஆசிரியர் மாணாக்கர்க்கு   தேவையான அறிவுரைகளை வழங்குவர். தாவரவியல் ஆசிரியர் முறை வந்தபோது இயற்கையின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாப்பதின் அவசியங்கள் குறித்து பேசினார். மிகச் சிலரை தவிர பெரும்பான்மையானவர்கள் அவரை கேலி செய்தனர். என்னை மிகவும் வருந்த செய்தது, ஆசிரியர்களே அவரை பின்னால் நின்று கேலி செய்தது.

மற்ற கல்வியுடன், சூழ் நிலையியல் குறித்த கல்வியையும் நம் பிள்ளைகளுக்கு, கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனக்கு தெரிந்து, சூழ் நிலையியல் முக்கியமான கேள்விகள் கேட்கப்படாத, ஒதுக்கப்பட்ட பாடமாகவே அவை உள்ளது. தேர்வுகளுக்காக அல்லாமல், தேவைகாக சூழ் நிலையியல் குறித்த கல்வி அவசியம்.

இயற்கை குறித்த புரிதலை நம் பிள்ளைகளுக்கு, அளிக்க தவறினால் எதிர்காலத் தலைமுறை காற்றைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள்.

 நீங்களே முடிவெடுங்கள் நம் வருங்கால தலைமுறைக்கு நாய், பூனை, புலி, சிங்கம், பூச்சிகள், மரம், செடி, கொடிகளை நேரடியாக காட்டப் போகிறோமா? அல்லது கைப்பேசியிளா?




ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

சென்னை கதைகள்

சென்ற வாரம் நூலகத்தில், சென்னை சிறுகதைகள் என்ற புத்தகத்தைப் பார்த்தேன். முதல்முறையாக சென்னையைப் பற்றிய ஒரு சிறுகதை தொகுப்பை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பல முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்று இருந்தன. சென்னையின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, மொழி, உணவு, வெயில் என எல்லா தளங்களையும் தொட்டு இருந்தது. எல்லா சிறுகதைகளும் சிறப்பாகவே இருந்தது. 

என்னை மிகவும் பாதித்தது, ஜெயகாந்தன் எழுதிய "தாம்பத்தியம்" என்ற சிறுகதை. நடைப்பாதையில் குடியிருக்கும், காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் தொழிலாளிக்கும், சித்தாள் வேலைச் செய்யும் பெண்ணுக்கும் திருமனம் நடைபெறுகிறது. இவர்களுக்குள் நடைபெறும் தாம்பத்தியம், இந்த சமுதாயத்தால் எப்படி கேவலப்படுத்தப்படுகிறது என்பதுதான் கதை. எனக்கும் சென்னைக்கும் ஒரு 12 வருடப் பரிச்சயம் இருக்கும். ஒவ்வொருமுறை நடைபதையில் வாழ்பவர்களை பார்க்கும் போதும் எனக்குள் இந்த கேள்வி எழும். இவர்களுக்குள் எப்படி தாம்பத்தியம் நிகழ்ந்து, குழந்தைப் பெற்றார்கள் என்று. சென்னையின் பரபரப்பில், நாம் பல விடயங்களை கவனிப்பது இல்லை. நடைப்பாதையில் வாழும் பெரியவர்களைவிட, சிறார்களும் குழந்தைகளும்தான் என் கவலையை அதிகம் ஆக்குபவர்கள்.





 இன்று(ஏப்ரல் - 12) "வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்" சில தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் இனைந்து, "வீதியிலிருந்து பள்ளிக்கு" என்ற நிகழ்வின் மூலம் பல ஆயிரம் குழந்தைகளை, படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

https://www.youtube.com/watch?v=BCd3fmXQQy4 



இந்தியாவில் மட்டும் 11 மில்லியன் சிறார்கள் வீதியோரத்தில் இருக்கிறார்கள். ஒரு தனியார் நிறுவனம் இந்த அளவிக்கு செய்யும் போது, அரசாங்கம் நினைத்தால் இன்னும் அதிகம் செய்யலாம். நம் அருகிலும் இதுபோன்ற நிறைய சிறுவர்கள் உள்ளார்கள். அதில் ஒருவருடைய வாழ்கையை ஆவது மாற்ற முயற்சி செய்துதான் பார்போமே.....