ஞாயிறு, 1 மார்ச், 2015

எட்டு பண்பாடுகளின் நாடு - 2


முந்தையப் பதிவில் எண்டோ சல்பானைப் பற்றி எழுதினேன். இந்த இரண்டாவது பதிவில் மற்ற விடயங்களைப் பற்றி பார்ப்போம்.

உண்மை சம்பவத்தை தழுவி இருந்தாலும், பிரசார நெடி சிறுதும் இல்லை. மிக செறிவாக, மிக அழகாக எழுதியுள்ளார். 36 வது அத்தியாயத்தில் ஜெயராஜன் கூட்டத்தில் ஆற்றும் உரை கூட சுவாரசியமாகவும் உள்ளது, நிறைய தகவல்களுடனும் உள்ளது.

 நீலகண்டன் - தேவயானி இருவருக்குமான காதல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. இப்படியான ஒரு அழகான, கண்ணியமான காதலை நான் எங்கும் கண்டதும் இல்லை, படித்ததும் இல்லை.

 நிறைய கதாபத்திரங்கள் வருகிறார்கள், எல்லோரும் நம் மனதில் பதிந்துவிடுகிறார்கள். குகை, வயதான கழுதை, சுக்ரீவன், நண்டு, நிலைக்கண்ணடி என்று மனிதர்களோடு சேர்ந்து இவைகளும் நம் மனதில் பதிந்துவிடுகிறது.

 நாவலின் முடிவில் நீலகன்டனும் தேவயானியும் குகையினுள் அடைகலம் புகும் காட்சி, விவிலியத்தில் நோவாவின் கதையை நினைவுப்படுத்தியது. நோவா கட்டும் பேழையில் அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடி இருக்கும். பிரளயத்தால் கடவுள் உலகத்தை அழித்துப் போடும் மட்டும் உள்ளே பாதுகாப்பாக இருக்கும். இந் நாவலின் இறுதியிலும் குகையின் உள்ளே அனைத்து ஜீவராசிகளும் பிரளயம் முடியும் வரை, இவைகள் இங்கேதான் இருக்கும் என்று குகை கூறும். நீலகண்டனும் தேவயானியும் குகையினுள் காலடி எடுத்து வைக்கும் போது குகை பெரிய படகை போல் ஆடும்.

மற்றொரு இடத்தில் நீலகண்டனும், ஜெயராஜனும் ஏதோ சத்தம் கேட்டு வெளியே  வந்து பார்ப்பார்கள். ஜடாதாரி மலையில் சூறாவளி கடுமையாக வீசீக் கொண்டு இருக்கும். அது பார்ப்பதற்கு சிவனின் தாண்டவம் போல் இருக்கிறது என்பார்கள்.

இப்படி பல இடங்களில் இயற்கையை கடவுளுடன் ஒப்பிட்டு இருப்பார் அம்மிகாசுதன். எனக்கு அவர் இயற்கைதான் கடவுள் என்று கூறுகிறாரோ என்று தோன்றியது.

இயற்கைதான் உண்மையான கடவுள். இயற்கையை வணங்கி அதை பத்திரமாக பார்த்துக் கொண்டால், இயற்கை நமக்கு வேண்டிய வரத்தையும் கொடுத்து, நம்மையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக